விடுதிப் பெண்களை தவறாக வழிநடத்த முயன்ற புகாரில் தேடப்பட்டு வந்த காப்பாளர் புனிதா கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கோவை ஹோப்ஸ் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண்களை அதன் உரிமையாளர் ஜெகநாதன் மற்றும் காப்பாளர் புனிதா ஆகியோர் தவறாக வழிநடத்த முயன்றதாக புகார் எழுந்தது. ஜெகநாதன் விடுதிப் பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஜெகநாதன் மற்றும் புனிதாவை காவல்துறையினர் தேடி வந்தனர். இதனிடையே கடந்த 26ஆம் தேதி நெல்லை மாவட்டம் சிவலார்குளத்தில் கிணறு ஒன்றிலிருந்து ஜெகநாதனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த புனிதா, கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
பின்னர் நீதிமன்றக்காவலில் அவரை சிறையில் அடைக்க காவல்துறையினர் அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் புனிதாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகளிர் அமைப்பினர், அவரை தாக்க முயன்றனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பான சூழல் நிலவியது. தனியார் விடுதி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற சம்பவம் மற்றும் அதன் உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக புனிதாவை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.