தஞ்சையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை: வார்டன் கைது-உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம்

தஞ்சையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை: வார்டன் கைது-உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம்
தஞ்சையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை: வார்டன் கைது-உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம்
Published on

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பிளஸ் 2 மாணவியொருவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார். வார்டன், ஹாஸ்டலில் உள்ள அறைகளை சுத்தம் செய்ய சொல்லியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் மாணவி இருந்ததாக தகவல் பரவிவருகிறது. அதேநேரம், ஆசிரியர் தன்னை மதமாற்றம் செய்ய சொன்னதாகவும், அதனாலேயே மன உளைச்சலில் மாணவி தற்கொலை செய்ததாகவும் தகவல் பரவிவருகிறது.

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 47). இவரின் முதல் மனைவி கனிமொழி. அவரது மகளுக்கு வயது 17. கனிமொழி, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் முருகானந்தம் மகளை மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைபள்ளியில் 8ம் வகுப்பில் சேர்த்து இருந்தார். தற்போது 12ம் வகுப்பு படித்து வந்தார். அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் மாணவி தங்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி மாணவி வாந்தி எடுத்துள்ளார். அப்போது அவர் தனக்கு வயிற்றுவலி என்று கூறியதால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் மறுநாள் அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முருகானந்தம் மைக்கேல்பட்டி வந்து தன் மகளை அழைத்து சென்றுள்ளார். பின்னர் மாணவிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 15ம் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்களிடம் மாணவி , தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதன் பேரில் ஏற்பட்ட மன உளைச்சலால் பூச்சி மருந்தை குடித்ததாகவும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அம்மருத்துவர்கள் இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் மாணவியிடம் வந்து விசாரித்தனர்.

இதற்கிடையில் மாணவி பேசிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. அதில், “என்னை பள்ளி நிர்வாகம் மதமாற்றம் செய்யக் கூறியது. அதற்கு அம்மாவும் அப்பாவும் ஒத்து வராததால், பள்ளியில் என்னை துன்புறுத்தி வேலை வாங்கினர்” என மாணவி பேசியிருந்தார். இப்படியான சூழலில்தான் மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இன்று மாணவியின் உடலை பெற்றோர்கள் வாங்க மறுத்துள்ளனர். மேலும் தஞ்சை மருத்துவக் கல்லூரி முன்பு மருத்துவக் கல்லூரி சாலையில் அவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட உயிரிழந்த மாணவியின் பெற்றோருடன் பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் இணைந்தனர். பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், “ஆசிரியை ராக்கிலின்மேரி என்பவரை கைது செய்ய வேண்டும், அந்த பள்ளியை மூட வேண்டும். இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார். 

இன்றைய போராட்டத்தின்போது, ஏற்கெனவே தாங்கள் இதுகுறித்து தஞ்சை மருத்துவகல்லூரி காவல் நிலையத்தில் தஞ்சை எஸ்பி ரவளி பிரியாவிடம் மனு கொடுத்து, ‘உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்திருந்ததாகவும், ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததாகவும் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தங்களது அக்கோரிக்கை மனுவில், “காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில், ‘மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் மாணவி உயிரிழந்தார்’ என வழக்கை மாற்ற வேண்டும், மேலும் இதற்கு காரணமான ஆசிரியரை கைது செய்ய வேண்டும், பள்ளியை உடனடியாக மூட வேண்டும்” என கூறியிருந்ததாக அவர்கள் கூறினர். 

இதுகுறித்த புகாரின் பேரில் தற்போது காவல்துறையினர் வார்டன் சகாயமேரியை (வயது 62) கைது செய்துள்ளனர். மேலும் “மத மாற்றம் செய்ய முயன்ற ஆசிரியரை கைது செய்ய வேண்டும், பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியின் பெற்றோர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com