"உணவின்றி தவித்த குதிரை வண்டிக்காரர் குடும்பம்": விரைந்து உதவிய மதுரை ஆட்சியர்

"உணவின்றி தவித்த குதிரை வண்டிக்காரர் குடும்பம்": விரைந்து உதவிய மதுரை ஆட்சியர்
"உணவின்றி தவித்த குதிரை வண்டிக்காரர் குடும்பம்": விரைந்து உதவிய மதுரை ஆட்சியர்
Published on

உணவின்றி தவித்த குதிரை வண்டிக்காரர் குடும்பத்திற்கும், 3 குதிரைகளுக்கும் உணவுப்பொருட்கள் மற்றும் தீவனம் வழங்கி உதவிய மதுரை ஆட்சியரின் உடனடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் தங்களது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பல தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரானாவின் கோரத்தாண்டவத்தை விட பசி பட்டினியால் ஏழை எளிய மக்கள் நாளுக்கு நாள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர். கொரானா ஏற்படுத்திய தாக்கத்தால் வாயில்லா ஜீவன்களும் உணவின்றி தவித்து வரும் சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், மதுரை நரிமேடு கட்டபொம்மன் நகரை சேர்ந்தவர் 77 வயதான குதிரைவண்டிக்காரர் காந்தி. இவருடைய மனைவி குருவம்மாள்(65). இவர்கள் அப்பகுதியில் சுமார் 20 வருடங்களாக வாடகை வீட்டில் குடியிருந்து வருவதோடு, 15 வருடங்களுக்கும் மேலாக மூன்று குதிரைகளை வைத்துக்கொண்டு அதை வைத்தே தங்களுடைய வயிற்றை நிரப்பி வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

யாருடைய ஆதரவின்றியும் 3குதிரைகளை வைத்து குழந்தைகளை சவாரி ஏற்றியும், வெளிநாட்டினரை சவாரி ஏற்றியும், குதிரை வண்டி ஓட்டியும் அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில், ஊரடங்கு உத்தரவால் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து நிர்கதியாய் நிற்க வேண்டிய அவல நிலைக்கு தம்பதிகள் தள்ளப்பட்டனர்.

கொரானாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, ஒரு வேளை உணவிற்கு அவர்கள் மட்டுமல்லாது அவர்கள் வளர்த்து வரும் 3 குதிரைகளும் தீவனம் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர் பிரகாஷ் என்பவர் ஒரு வாரத்திற்கு மேலாக குதிரைவண்டிக்காரர் காந்தி மற்றும் அவரது குதிரைகளின் உணவின்றி தவித்து வரும் நிலை குறித்து மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் அவர்களின் வாட்சப்பில் தகவலளிக்க, அந்தச் செய்தியை அறிந்த மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் உடனடி நடவடிக்கையாக குதிரை வண்டிக்காரர் மற்றும் அவரின் மூன்று குதிரைகளுக்கு தேவையான 5 கட்டு தீவனம் மற்றும் 10 கிலோ அரிசி, ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி தொகுப்பு, மற்றும் மசாலா பொருட்களை வடக்கு தாலுகா வட்டாச்சியர் சுரேஷ் பிரெட்ரிக் மூலம் நேரடியாக சென்று அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்க வைத்தார்.

மேலும் ஊரடங்கு உத்தரவு காலம் முடியும் வரை குதிரைகளுக்கும், குதிரை வண்டிக்காரர் காந்தியின் குடும்பத்திற்கும் தேவையான உணவு பொருட்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் குதிரைகளுக்கு தேவையான தீவனங்களை வழங்க ஆட்சியர் வினய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com