கொரோனா பரவல் காரணமாக சென்னை, ஈரோடு உள்ளிட்ட புத்தகக் காட்சிகள் நடைபெறவில்லை. மக்கள் பலவகைகளில் பாதிக்கப்பட்டுள்ளதால் புத்தக விற்பனையும் குறைந்துள்ளது. புத்தகக் காட்சி, நேரடி விற்பனை, வியாபாரிகள் மூலம் விற்பனை, இணையவழி விற்பனை என பல முறைகளை நம்பியிருக்கும் பதிப்பாளர்கள், தற்போது புதுமையான பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
புத்தக விற்பனைக்கான பொது இணையதளம் வழியாக புத்தகக் காட்சியை வாசகர்களின் வீட்டுக்கே கொண்டு செல்லும் முயற்சி பற்றி 'இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் 'சிக்ஸ்த் சென்ஸ்' பதிப்பாளர் கே.எஸ்.புகழேந்தி விரிவாகப் பேசியுள்ளார்.
(பதிப்பாளர் கேஎஸ். புகழேந்தி)
"கொரோனாவால் நாம் பல விஷயங்களில் புதிய வழிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறோம். பதிப்புச் சூழலும் அப்படியான மாற்றங்களை எதிர்நோக்கியிருக்கிறது. பதிப்புத் துறைக்குப் பிரதான வருவாய் ஈட்டித் தரும் புத்தகக் காட்சியிலும் புதிய வழிமுறைகள் குறித்து சிந்திக்க வேண்டிய தேவையை இந்தக் காலகட்டம் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில்தான், பதிப்பாளர்களுக்குப் பயன்தரக்கூடிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்தோம். அப்படித்தான் மெய்நிகர் புத்தகக் காட்சி நடத்தும் யோசனை உருவானது" என்று குறிப்பிட்டுள்ளார் புகழேந்தி.
மேலும் பேசியுள்ள அவர், "ஆண்டுக்கு நான்கு புத்தகக் காட்சிகள் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். ஒவ்வொரு புத்தகக் காட்சியும் ஒரு மாதம் நடைபெறும். தலைப்பு, பதிப்பகம், ஆசிரியர், விலை, ஐஎஸ்பிஎன் என வெவ்வேறு பிரிவுகளின்கீழ் புத்தகங்களை வாசகர்கள் பார்வையிடலாம். 100 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்கிறார்கள் என்றால், ஒவ்வொருவருக்கும் அவர்களது தனித்தன்மையை எடுத்துக்காட்டும் வகையிலான தனித்தனி வலைப்பக்கங்கள் இருக்கும். வாசகர்கள் தங்கள் விரும்பும் குறிப்பிட்ட பதிப்பகப் புத்தகங்களை மட்டும் தேடிப்பார்த்து வாங்கிக்கொள்ளவும் முடியும்" என்கிறார்.