இரண்டு வயது குழந்தைக்கு எச்.ஐ.வி ரத்தம்? - மீண்டும் ஒரு சர்ச்சை

இரண்டு வயது குழந்தைக்கு எச்.ஐ.வி ரத்தம்? - மீண்டும் ஒரு சர்ச்சை

இரண்டு வயது குழந்தைக்கு எச்.ஐ.வி ரத்தம்? - மீண்டும் ஒரு சர்ச்சை
Published on

கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று‌ள்ள ரத்தம் ஏற்றப்பட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். 

திருச்சியை சேர்ந்த விஸ்வநாதன்- சாந்தி தம்பதியினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.  அதில் பெண் குழந்தை எடை குறைவாக பிறந்ததால், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் இவர்கள் திருப்பூரில் பணியாற்றி வந்ததால் அங்கிருந்து திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது குழந்தைக்கு இருதய நோய் இருப்பதாக தெரிவித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தைக்கு ரத்தம் ஏற்றபட்டது. பின்னர் குழந்தைக்கு இருதய நோய் சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தையை டிஸ்சார்ஜ் செய்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் குழந்தைக்கு சிறுசிறு கட்டிகள் ஏற்பட்டதால் மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதே சமயம் குழந்தையின் பெற்றோர் இருவருக்கும் மற்றொரு குழந்தைக்கும் எச்.ஐ.வி பாதிப்பு இல்லாததும் மருத்துவ சோதனையில் உறுதிசெய்யப்பட்டது. இந்தச் சூழலில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் வேறு எங்கும் குழந்தையினை சிகிச்சைக்காக அழைத்து செல்லவில்லை என்றும், மருத்துவமனையில் ஏற்றப்பட்ட இரத்தத்திலேயே பிரச்னை இருக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், கோவை அரசு மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தத்தால் குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படவில்லை எனக் கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் விளக்கமளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கோவை பந்தயசாலை காவல்நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்த நிலையில் அதனை ஏற்க அவர்கள் மறுத்ததாகவும், இதனால்,சட்ட நிபுணர்களை அணுகியுள்ளதாக அக்குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கோவை அரசு மருத்துவமனையில் இரத்தம் ஏற்றபட்டபோது மருத்துவர்கள் திடீரென நிறுத்தினர், அப்போது மருத்துவர்களிடம் முறையிட்டு கேட்டபோது, முதியவரின் ரத்தம் குழந்தைக்கு தெரியாமல் செலுத்தி விட்டோம் என மருத்துவார்கள் தெரிவித்தாக குழந்தையின் தந்தை விஸ்வநாத் கூறியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com