எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட தம்பதி தனது 25நாள் குழந்தையை 1.1லட்சம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த தம்பதி ஒன்று எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் இருந்தன. அவர்கள் இருவருக்கும் எச்.ஐ.வி பாதிப்பு இல்லை. இந்தக் குடும்பம் கடும் வறுமையால் தவித்து வந்தது.
இந்தச் சூழலில் மீண்டும் இந்த தம்பதிக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை ஒன்று கடந்த 25 நாட்களுக்கு முன்பு பிறந்துள்ளது. இந்தக் குழந்தைக்கு இதய பிரச்னை இருந்துள்ளது. குடும்பத்தின் வறுமை காரணமாக இந்தக் குழந்தையை அந்த தம்பதி விற்க முடிவு செய்துள்ளது. இதற்கு மருத்துவமனை ஊழியர் ஒருவர் உறுதுணையாக இருந்துள்ளார்.
இதனையைடுத்து பிறந்து 25 நாட்களே ஆன குழந்தையை 1.1 லட்சம் ரூபாய்க்கு மற்றொரு வயதான தம்பதிக்கு இவர்கள் விற்று உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தக் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. ஆகவே குழந்தையை வாங்கிய வயதான தம்பதி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது குழந்தையை சோதித்து பார்த்த மருத்துவர்கள் குழந்தை தற்போது மிகவும் பலவீனமாக இருக்கிறது. ஆகவே தாய்பால் கொடுக்கும்படி அறிவுரை வழங்கியுள்ளார். அந்தச் சமயத்தில் இந்த வயதான தம்பதிகள் மறுத்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் மருத்துவர் நடத்திய விசாரணையில் அவர்கள் குழந்தை தங்களுடையது இல்லை என்று ஒப்புக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரியிடம் இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட குழந்தை நல குழு இந்த இரு தம்பதியையும் அழைத்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் எச்.ஐ.வி. பாதித்த தம்பதி தங்களது குடும்ப வறுமை காரணமாக குழந்தையை விற்றத்தை ஒப்புக் கொண்டனர். அதேபோல குழந்தையை வாங்கிய வயதான தம்பதியும் 1.1 லட்சம் ரூபாய் கொடுத்து குழந்தையை வாங்கியதையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும் குழந்தையை வாங்கிய தம்பதியின் மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்ததால் அவர்களின் மகன் நினைவாக ஒரு ஆண் குழந்தையை தத்தெடுக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது மருத்துவமனையில் பணி செய்யும் பெண் ஒருவர் இவர்களுக்கு ஆண் குழந்தையை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அவர் கூறியது போல் இந்தக் குழந்தையை வாங்கி கொடுத்துள்ளார். அதற்கு இந்த வயதான தம்பதியிடம் 20 ஆயிரம் கமிஷனாக அப்பெண் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.