தொடக்கக் காலத்தில் பொதுத் தொகுதியாக இருந்து வந்த நீலகிரி மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்குப் பின் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. இந்தத் தொகுதியில் அவினாசி, மேட்டுப்பாளையம், குன்னூர், கூடலூர், உதகமண்டலம், பவானிசாகர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இவற்றில் அவினாசி மற்றும் கூடலூர் தொகுதிகள் தனித் தொகுதிகளாகும்.
இதில் அவினாசி திருப்பூர் மாவட்டத்திலும், மேட்டுப்பாளையம் கோவை மாவட்டத்திலும், பவானி சாகர் ஈரோடு மாவட்டத்திலும் மீதமுள்ளவை நீலகிரி மாவட்டத்திலும் என நான்கு மாவட்டங்களில் பரவிக்கிடக்கும் மக்களவைத் தொகுதி நீலகிரி.
தொடக்கக் காலம் முதல் காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்த தொகுதியாகும் இது. 7 முறை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்ற தொகுதி இது. குறிப்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். பிரபு இத்தொகுதியில் இருந்து 5 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுகவின் ஆ.ராசா இரு முறை வென்ற தொகுதி இது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆ.ராசா 5 லட்சத்து 47 ஆயிரத்து 832 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தியாகராஜன் 3,42,009 வாக்குகளைப் பெற்றார். மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் களம் கண்ட ராஜேந்திரன் 41,169 வாக்குகளையும், அமமுக வேட்பாளர் ராமசாமி 40,419 வாக்குகளையும் பெற்றனர்.