நாம் நாட்டு பசுக்களை தான் அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும், தற்போதுள்ள வெளிநாட்டு பசுக்கள், பன்றிகளுக்கு சமம் என இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் கூறினார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள சிறுமுகை பகுதியில் இந்து முன்னணி சார்பில் பசு பாதுகாப்பு மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. இதில் பேசிய இந்து முன்னணி நிறுவனர் ராம. கோபாலன், ’பசுக்கள் மீது பக்தி கொண்டவர்கள் நமது நாட்டு பசுக்களை பாதுக்காக்க முன்வரவேண்டும். தற்போது அதிகம் வளர்க்கப்படும் ஜெர்சி இன வெளிநாட்டு பசுக்கள் உண்மையில் பசுக்களே அல்ல, அவை பன்றிகளுக்கு சமம். ஏனென்றால் பன்றிகளுக்கு தான் திமில் இருக்காது. அதே போல் வெளிநாட்டு பசுக்களுக்கும் திமில் இருக்காது. எனவே நமது தேசிய இனமான நாட்டுப் பசுக்களை வளர்க்கவும் பாதுக்காக்கவும் வேண்டும். பசுக்கள் இல்லையெனில் நாம் இல்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடித்தால் மட்டுமே, நாம் முழு சுதந்திரம் அடைந்ததாக கருத முடியும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ராமர் கோவில் கண்டிப்பாகக் கட்டி முடிக்கப்படும்’ என்றார்.