செய்தியாளர்: ஆர்.மோகன்
கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்று ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோயில். ஆண்டுதோறும் மாசி மகத்தை முன்னிட்டு ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி தீர்த்தவாரிக்காக சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை முழுக்குத்துறை கடற்கரை பகுதிக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு மாசி மக தீர்த்தவாரியை ஒட்டி இன்று கிள்ளைக்கு பூவராகசாமி தீர்த்தவாரிக்கு வருகை தந்தார்.
அப்போது கிள்ளை அருகே தைக்கால் கிராமத்தில் உள்ள சையத்ஷா ரகமத்துல்லா தர்காவில் பாரம்பரிய முறைப்படி பூவராகசாமிக்கு பட்டாடை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் பூவராகசாமிக்கு பட்டுசாத்தி படையல் நடந்தது. இதில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி நிர்வாகம் சார்பில் நாட்டு சர்க்கரையும், மாலையும் தர்கா நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சர்க்கரை, மாலையை எடுத்துச் சென்று ரகமத்துல்லா பள்ளி வாசலில் வைத்து, பாத்திஹா ஓதி அனைவருக்கும் சர்க்கரை வழங்கப்பட்டது. இரு சமூகத்தினரும் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.