சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட உயர்கல்வி கொள்கை விளக்க குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக உயர்கல்வி மன்றம் சார்பில் அரசின் தொலைநோக்கு திட்டம் 2023ன் கீழ் 5 தனிச்சிறப்பு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளது. மேலும் சூரிய, தூய்மையான எரிசக்தி தொழில்நுட்ப மையமும், தானியங்கி மற்றும் வாகன தொழில்நுட்ப மையமும் அமைக்கப்பட உள்ளன. இதே போல் சென்னை பல்கலைக்கழகத்தில் அடிப்படை அறிவியல் மையம் அமைக்கப்படுவதோடு சுவாமி தயானந்த சரஸ்வதி இருக்கை நிறுவப்படவுள்ளது. சென்னை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்ப மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேசிய உயர்கல்வி திட்டத்தின் நிதியுதவியுடன் வைஃபை (Wi-Fi) வசதியுடன் கூடிய நவீன தானியங்கி நூலகம் இந்த ஆண்டில் ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களின் துணையுடன் பல்கலைக்கழக மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.