பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரியர் தேர்ச்சியில் எந்த மாற்றமும் இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருந்த மாணவர்களுக்கு தேர்ச்சி என்று அறிவித்த தமிழக அரசின் முடிவை ஏற்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏஐசிடிஇ கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் விளக்கமளித்துள்ள தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஏஐசிடிஇ எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை என தெரிவித்துள்ள அவர், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவின் கருத்தை ஏஐசிடிஇ கருத்தாக திணிப்பது கண்டனத்திற்குரியது என்றும், ஏஐசிடிஇ மின்னஞ்சல் வந்திருந்தால் அதை சூரப்பா வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.