தமிழகத்தில் உரிமம் இன்றி பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் இயங்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,“பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ள சூழ்நிலையில் பணி நிமித்தமாகவும், கல்வி தேவைகளுக்காகவும், வெளியூர்களுக்கு சென்று தங்குவது இயல்பாகி உள்ளது.
இதனால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பெண்கள் தங்கும் விடுதிகள், இல்லங்கள், Paying Guest போன்ற முறையிலான வீடுகள் என அதிகரித்து உள்ளன. ஆகவே பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 2014 ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தின் படியும் 2015ல் வெளியிடப்பட்ட அரசாணை படியும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள்,இல்லங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை முறையாக அமல்படுத்தபட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
மேலும் முறைகேடாக சான்றிதழ்கள் வழங்கும் அதிகாரிகள் மீதும் சான்றிதழ்கள் பெறுவோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரியும் அந்த மனுவில் கூறியிருந்தார்.
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் சசிதரன்,ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, தீயணைப்புத்துறை இயக்குநர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், குழந்தைகள் மற்றும் பெண்கள் விடுதிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக பிப்ரவரி 28ஆம் தேதிக்குள்ளாக முடிவெடுக்க வேண்டும் எனவும் மார்ச் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உரிமம் இன்றி எவ்வித பெண்கள், குழந்தைகள் விடுதியும் இயங்கக் கூடாது என்று அதிரடி உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
மேலும் சில நாள்களுக்கு முன்பு முறையான அனுமதி பெறாமல் பெண்கள் விடுதி நடத்தி வந்த ஒருவரே பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் வைத்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.