சிவகங்கை மாவட்டம் கீழடியில் 9 ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் இந்த அகழாய்வு பணிகள் விரிவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வீரணன் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் 14 குழிகள் வெட்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த அகழாய்வில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணால் செய்யப்பட்ட விலங்கின உருவங்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆட்டக் காய்கள், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், அஞ்சனக் கோல்கள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனைகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள் என 183 தொல் பொருட்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.
அதேபோல் கொந்தகையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் இதுவரை 17 முதுமக்கள் தாழிகள் மூன்று நிலைகளில் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் கீழடி கொந்தகை அகழாய்வில் கருப்பு சிவப்பு நிற முதுமக்கள் தாழி ஒன்றில் இருந்து கார்னிலியன் கல் வகையைச் சேர்ந்த இரண்டு உயர்வகை சிவப்பு கல் மணிகளால் ஆன சூதுபவள மணிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இரண்டு மணிகளும் பீப்பாய் வடிவில் உள்ளன. ஒரு மணியில் அலை முறை மற்றும் வட்டக் கோடுகளுடன் வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. அகழாய்வு குழிகளில் 17.5 செ.மீ மற்றும் 20 செ.மீ ஆழத்தில் இந்த இரண்டு சிவப்பு மணிகளும் கண்டறியப்பட்டுள்ளது, இந்த இரண்டு சூதுபவள மணிகளின் நீளம் 1.4 செமீ மற்றும் அதன் விட்டம் 2 செ.மீ என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொந்தகை மூன்றாம் கட்ட அகழாய்விலும் இதே ஆழத்தில் கிடைக்கப்பெற்ற ஒரு கருப்பு சிவப்பு நிற முதுமக்கள் தாழியிலிருந்து 74 சூதுபவள மணிகள் வெளிக் கொணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.