தமிழகத்தில் இன்று காலை +2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், 94.56 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்ற அறிவிப்பினை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தேர்வில் அரசு பள்ளி மாணவர்களும் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றனர். இதன்படி 100% தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகளின் எண்ணிக்கை - 397 என்றும் அரசுப்பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 91.32% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகள் - 87.13% தேர்ச்சியை பெற்றுள்ளது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
இதன்படி, அரசுப்பள்ளிகளிலும், திருப்பூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது.
திருப்பூர்- 95.75%
அரியலூர் - 95.64%
ஈரோடு - 95.63%
சிவகங்கை- 95.56%
தூத்துக்குடி - 94.13%
இதன்படி, திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் கடைசி இடத்தை பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் - 88.78%
கிருஷ்ணகிரி - 88.30%
திருவண்ணாமலை - 87.81%
மயிலாடுதுறை - 85.42%
திருவள்ளூர் - 84.70%
இந்நிலையில், பல தரப்பு மக்கள் தங்களின் வாழ்த்துகளை சமூக வலைதளப்பக்கத்திலும் தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
”பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்! இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்!” என்று தெரிவித்துள்ளார்.
“பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். மதிப்பெண்கள் குறைவாக பெற்று உடனடித் தேர்வுகள் எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் தேர்வுகளை எதிர்கொள்ளவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வெற்றி பெற்ற மாணவர்கள் என்றில்லாமல் தேர்வு எழுதிய அனைத்து மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு துணை நிற்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.