“குறிப்பிட்ட சமூகமே ஜல்லிக்கட்டில் பங்கேற்கிறது” - நீதிமன்றத்தில் வாதம்

“குறிப்பிட்ட சமூகமே ஜல்லிக்கட்டில் பங்கேற்கிறது” - நீதிமன்றத்தில் வாதம்
“குறிப்பிட்ட சமூகமே ஜல்லிக்கட்டில் பங்கேற்கிறது” - நீதிமன்றத்தில் வாதம்
Published on

நீதிமன்றம் அமைக்கும் ஆணையர் குழுவின் அடிப்படையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் “மதுரை அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஜல்லிகட்டுத் திருவிழாவை இந்த ஆண்டு ஜனவரி 15ல் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனுமதியும், தேவையான பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறி மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும் சிலர் ஜல்லிக்கட்டு திருவிழா கணக்கு வழக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை,யாரையும் கலந்தாலோசிக்காமல் தனது குடும்ப விழாபோல் தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுத்து வருவதாக கூறி தங்களை எதிர் மனுதாரராக சேர்க்க கோரியும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

மேலும் இந்நிலை தொடர்ந்தால் ஜல்லிக்கட்டினை அனைவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் நடத்தும் நிலையும், ஆர்வமும், பங்கெடுப்பும் குறையும். எனவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனைத்து சமூக மக்களின் பங்கெடுப்புடன் கூடிய விழாக்குழுவை அமைத்து ஜல்லிகட்டினை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 14 ஆண்டுகளாக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்தே விழா நடத்தப்படுகிறது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு எதிர் மனுதாரர்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட சில சமூகத்தினர் மட்டுமே பங்கெடுப்பதாகவும், அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து பேசிய நீதிபதிகள் பல்வேறு போராட்டங்களுக்கு பின்னரே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. அனைவரும் ஒருங்கிணைந்து விழாவை நடத்த வேண்டும். ஒருங்கிணைந்த முடிவு எட்டப்படவில்லை எனில், இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க நேரிடும் என எச்சரித்தனர். மேலும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விழாக்குழுவை நீதிமன்றமே அமைக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து இது தொடர்பாக முடிவெடுக்க மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், காவல் ஆணையர் ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.

இதையடுத்து மூவரும் நேரில் ஆஜரான நிலையில், மனுதாரர்கள் தரப்பில் விழாக்குழு உறுப்பினர்களாக சிலர் பரிந்துரைக்கப்பட்டனர். இதையடுத்து குழுவின் தலைவரை தேர்ந்தெடுப்பதில் சுமூக நிலை எட்டப்படாததை அடுத்து, நீதிமன்றம் அமைக்கும் ஆணையர் குழுவின் தலைமையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் இது குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com