கலப்பட பால் விற்பனையாளர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆவின் பால் தவிர மற்ற பால்களில் கலப்படம் நடைபெறுவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சில மாதங்களுக்கு முன்பு குற்றம் சாட்டினார். இதையடுத்து ஆவின் உள்ளிட்ட பல்வேறு பால் நிறுவனங்களில் சோதனை நடத்தி உண்மை நிலையை அறிய வேண்டும் என வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் பொதுசுகாதாரத்துறை இயக்குநர் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் இன்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி அமுதா ஆஜராகி அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 18 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை 42 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள் பொதுசுகாதாரத்துறை இயக்குநர் ஆஜராக உத்தரவிட்டும் ஆஜராகாதது ஏன் என கேள்வி எழுப்பினர். மேலும் அரசு தாக்கல் செய்த அறிக்கையில் போதிய விவரங்கள் இல்லை என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசு அபராதம் மட்டும்தான் விதிக்குமா? நடவடிக்கை எடுக்காதா? அபராதம் மட்டுமின்றி தண்டனை விதித்தால் தான் பால் கலப்படத்தை தடுக்க முடியும் என அறிவுறுத்தினர்.
தெளிவான அறிக்கையை ஜனவரி 21 சமர்பிக்க வேண்டும் எனவும் கலப்பட பால் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.