மக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள பால் கலப்படத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பால் கலப்பட வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் முன்பு விசாரனைக்கு வந்தது.
அப்போது, கலப்படப் பால் தொடர்பான வழக்குகளில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான பாலில், கலப்படம் செய்வது என்பது ஆரோக்கியத்திற்கு விடுக்கப்படும் மிரட்டல் என்பதால் அதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர், தமிழகம் முழுவதும் பால் கலப்படம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, அந்த வழக்குகளில் வழங்கப்பட்ட தண்டனை விவரங்கள், தண்டனை பெற்றவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை உள்ளிட்ட விவரங்களை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.
விவரங்களைத் தருவதில் மாவட்ட வருவாய் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் அவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர். அரசின் நடவடிக்கைகளில் திருப்தி அடையாவிட்டால் சுகாதாரத் துறை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்து வழக்கை பிப்ரவரி 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.