போதைப்பொருள் கடத்தல் மண்டலமாக நம் நாடு பயன்படுத்தப்படுகிறதா என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், போதை பொருள் கடத்தலை வேரறுக்க மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான வேலூர் மாவட்டம் பொம்மிகுப்பத்தைச் சேர்ந்த விஜயகுமார் கைதான நிலையில், அவரை குண்டர் சட்டத்தில் அடைத்து 2019 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரதாப்குமார், இந்த வழக்கில் தொடர்புடைய முதல் மற்றும் இரண்டாவதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சகோதரர்கள் எனவும், அவர்கள் குடும்பத்தினருக்கு சொந்தமான லாரியை கொண்டு சரக்குகளை வாகன போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், போதைப் பொருள் கடத்தல் அதிகரிப்பது மற்றும் அதனால் சமூகம் சீரழிவதை முக்கிய விஷயமாக கருதுவதாக தெரிவித்ததுடன், வழக்கில் மத்திய மாநில அளவிலான போதைப் பொருள் தடுப்பு பிரிவுகளை தாமாக முன்வந்து வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்த்தனர்.
மேலும், போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் 10 ஆண்டில் எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? போதைப்பொருள் கடத்தலுக்கு வேலையில்லாதிண்டாட்டம்தான் காரணமா? போதைப்பொருள் வழக்குகள் குற்றங்களை கையாள தனிப்பிரிவை ஏன் உருவாக்க கூடாது? போலீசாரிடம் உள்ள ஆளில்லா கேமரா மூலம் போதைப்பொருளை கண்காணிக்க, அழிக்க ஏன் முடியவில்லை? என போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், தமிழக உள்துறை செயலாளரும், போதைப்பொருள் தடுப்பு பிரிவுகளும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.