மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களில் எளிதாக கையாளும்போது, ஆவின் பாலை ஏன் கையாள முடியாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் பால், தயிர், எண்ணெய் உறைகள் தவிர 14 வகையான நெகிழி பொருட்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நெகிழி உற்பத்தியாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கடந்த ஓராண்டில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை உற்பத்தி செய்த 52 தொழிற்சாலைகளை மூட உத்தரவிடப்பட்டது போன்ற நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், நெகிழி தடை உத்தரவில் இருந்து பால், தயிர், எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை அடைக்க பயன்படுத்தும் நெகிழிக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை நீக்குவது குறித்து கடந்த ஜனவரி 28-ஆம் தேதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசின் அறிக்கையை பதிவு செய்த நீதிபதிகள், ஆவின் பால் நிறுவனத்தில் இருந்து இந்த நடவடிக்கை தொடங்க வேண்டும் என தெரிவித்தனர்.
அப்போது அரசு தரப்பில் பாலை கண்ணாடி பாட்டில்களில் அடைத்து கையாள்வது கடினமென தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கண்ணாடி பாட்டில்களில் விற்கப்படும் மதுபானங்களை எளிதாக கையாளும்போது, ஆவின் பாலை ஏன் கையாள முடியாது என கேள்வி எழுப்பினர்.
நெகிழி விழிப்புணர்வு ஆவணப்படங்களை திரைப்படங்களில் சேர்க்கவும், கல்வி நிறுவனங்களில் இதுதொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.