மைசூரில் வைக்கப்பட்டுள்ள தமிழ் கல்வெட்டுகள் அனைத்தையும், சென்னைக்கு இடமாற்றம் செய்ய இந்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு தமிழக வரலாற்று ஆய்வாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட தமிழக கல்வெட்டுகள், நினைவுச் சின்னங்கள், உதகைக்கு மாற்றப்பட்டு அதன் பின் கடந்த 1966ஆம் ஆண்டு மைசூருக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு தமிழ் கல்வெட்டுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மைசூரில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகளை சென்னைக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழ் சார்ந்த கல்வெட்டுகள் அனைத்தும் இனி தமிழகத்திற்கே இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் இந்திய தொல்லியல்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும் இதுவரை துணைக் கல்வெட்டு கண்காணிப்பாளர்கள் அலுவலகம் தென்சரகம் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், இனி ‘தமிழ்க் கல்வெட்டுகள் துணை கண்காணிப்பாளர்கள் அலுவலகம்’ என அழைக்கப்படும் என்றும் தொல்லியல்துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையினர் உத்தரவுக்கு கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுத் தலைவர் பொறியாளர் கோமகன் வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழர்கள் பாராட்டும் செயல் என்றும், இதற்கு துணை நின்ற அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி: கோயில்களை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைப்பு