நீதிபதி வீட்டிற்கு சென்ற வழக்கு ஆவணங்கள் மாயமானது குறித்து சிபிஐ விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுப்பெற்ற டி. மதிவாணன் விசாரித்த 100-க்கும் மேற்பட்ட வழக்குகளின் ஆவணங்கள் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது. தலைமை நீதிபதி உத்தரவின் படி, உயர்நீதிமன்ற பதிவுத்துறை விசாரணையில் இந்த வழக்கு ஆவணங்கள் நீதிபதியின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அதன்பின்னர் காணாமல் போய் விட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்குகளின் ஆவணங்களை இரு தரப்பினரிடம் இருந்து பெற்று, மறு கட்டமைப்பு செய்யும்படி பதிவுத்துறைக்கு, தலைமை நீதிபதி உத்தரவிட்டார். மாயமான சில ஆவணங்கள் தொடர்புடைய வழக்குகள் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தொடர்பான வழக்குகளின் ஆவணங்கள் பல காணாமல் போனது குறித்து நீதிபதிகள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, நீதிபதியின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வழக்குகளின் ஆவணங்கள், பெர்முடா ட்ரையாங்கிளில் மாயமாகும் கப்பல்களை போல மாயமாகி உள்ளதால் இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டார்.