இரு பெண்கள் சேர்ந்து வாழும் முடிவு குறித்து சம்பந்தப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உளவியல் ரீதியான கருத்துகளை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த இரண்டு பெண்கள் காதலித்து சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளது அவர்களது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரையும் பிரிக்க முயன்றபோது, அவர்கள் இருவரும் சென்னை தொண்டு நிறுவன காப்பகத்தில் தஞ்சம் அடைந்தனர். பாதுகாப்புக்கோரி இரு பெண்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, LGBTQIA எனப்படும் ஒரே பாலினத்தவர்கள் இணைந்து வாழ்வது தொடர்பான வழக்குகளில் வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்புகளை ஆராய்ந்து வருவதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் உளவியல் ரீதியான கருத்துகளை அறிந்து அவற்றை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதற்காக உளவியல் நிபுணர் வித்யா தினகரன் என்பவரை நியமித்துள்ள உயர் நீதிமன்றம், வரும் 26ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.