விஷ்ணு விஷாலின் தந்தை மீது சூரி தொடர்ந்த மோசடி வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்ற உத்தரவு

விஷ்ணு விஷாலின் தந்தை மீது சூரி தொடர்ந்த மோசடி வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்ற உத்தரவு
விஷ்ணு விஷாலின் தந்தை மீது சூரி தொடர்ந்த மோசடி வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்ற உத்தரவு
Published on

அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் குடவாலா மீது புதிதாக விசாரணை நடத்தி அதை ஆறு மாதங்களுக்குள் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் தயாரிப்பில் "வீர தீர சூரன்" என்கிற திரைப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும் நடிகர் சூரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ஒப்பந்தமாகி படப்பிடிப்புகள் நடந்தன. அப்போது நடிகர் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. எனினும் பேசப்பட்ட அடிப்படையில் சம்பளம் தராததால் அதுகுறித்து சூரி கேட்டபோது சம்பள பணத்திற்கு பதிலாக மேலும் சில கோடிகளை கொடுத்தால் நிலம் வாங்கித் தருவதாக படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும், விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வுபெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலாவும் கூறியதாகத் தெரிகிறது.

அதன்படி சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கிதருவதாகக் கூறி, ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் இருவரும் நடிகர் சூரியிடம் பல்வேறு தவணைகளாக ₹3.10 கோடி பெற்று நிலத்தை விற்பனை செய்ததாக கூறபடுகிறது.

இந்நிலையில் நிலம் வாங்கிய பிறகுதான் பல பிரச்னைகள் இருப்பது நடிகர் சூரிக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து நிலத்தை திருப்பி வாங்கி கொள்வதாகவும் பணத்தை திருப்பித்தருதாகவும் ஒப்பந்தம் ஒன்றை சூரியிடம் ரமேஷ் குடவாலா பதிவு செய்ததாகத் தெரிகிறது. ஆனால் சூரியிடம் வாங்கிய பணத்தில் 40 லட்ச ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். மீதி தொகையான ரூ. 2.70 கோடியை சூரிக்கு தராமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கடந்த மாதம் உத்தரவிட்டது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சூரி கடந்த 1ஆம் தேதி புகார் அளித்தார். அடையாறு போலீசார் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, திரைபட தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகிய இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபி என்பதால், அவர் மீதான விசாரணையை மத்திய குற்றப்பிரிவில் இருந்து சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சூரி தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபி என்பதால் அவருக்கு எதிராக விசாரணை நடத்தும் அதிகாரிகள் அவருக்கு சாதகமாக செயல்படுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் இதுபோன்ற பண மோசடி செயல்களில் ஈடுபடக்கூடாது கருத்து தெரிவித்தார். மேலும், கோடிக்கணக்கில் பண மோசடி நடைபெற்றுள்ளதால் இந்த வழக்கின் விசாரணையை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றி உத்தரவிடுவதாகவும், துணை ஆணையர் பொறுப்பில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி விசாரணை நடத்தவேண்டும் எனவும், இதனை கூடுதல் ஆணையர் பொறுப்பில் உள்ள அதிகாரி மேற்பார்வையிட வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் குடவாலா மீது புதிதாக விசாரணை நடத்தி அதை ஆறு மாதங்களுக்குள் முடித்து, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com