மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க உரிமை கோரி வழக்கு தொடர்ந்ததை உறுதி செய்வதற்காக ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரை ஆகஸ்ட் 30ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையை சேர்ந்த அதிமுக பிரமுகர் புகழேந்தி, ஜனார்த்தனன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில் ஜெயலலிதா 40 கோடி ரூபாய் வருமான வரி பாக்கி வைத்திருப்பதாகவும், அதற்காக அவரின் போயஸ் தோட்ட இல்லத்தை முடக்கியிருப்பதாகவும், நில அளவையர் பணியிலான ஆட்கள் பற்றாகுறையின் காரணமாக போயஸ் தோட்ட இல்லத்தை அளவிட காலதாமதம் ஆகும் என்றும், அதனால் அளவிடும் பணியை அண்ணா பல்கலைகழகத்திடமோ அல்லது வேறு அமைப்பிடமோ ஒப்படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் வருமான வரித்துறை பல இடங்களில் சோதனை செய்து பலரை கைது செய்கின்றனர், ஆனால் நீங்கள் விசாரிக்கும் வழக்குகளை பொருத்து அதிகாரிகளின் எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தினர்.
மனுதரார்கள் புகழேந்தி, ஜனார்த்தனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியை நிர்வாகியாக நியமிக்க வேண்டும், ஜெயலலிதாவின் சில சொத்துகளில் பொது மக்களுக்கு சேர வேண்டும் என வாதிட்டார். அப்போது நீதிபதிகள் ஜெயலலிதா இறந்த பிறகு போயஸ் தோட்ட இல்லம் யார் கட்டுபாட்டில் உள்ளது என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர் தற்போது அதை நினைவில்லமாக மாற்றுவதால் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தார். ஆனால் தீபா, தீபக் தரப்பு வழக்கறிஞர்கள் ஜெயலலிதா இறுதி சடங்குகள் நடத்தப்பட்டபின் தாங்கள் அங்கே அனுமதிக்கபடவில்லை என்றும், தற்போது மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொன்னாலும் வேறு வெளியாட்களும் தங்கியிருபதாக குற்றம் சாட்டப்பட்டது. அதேபோல 1996-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கி ஒன்றில் ஜெயலலிதா பெற்ற 2 கோடி ரூபாய் கடன் தற்போது வட்டியுடன் சேர்த்து 20 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் தீபா, தீபக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஜெயலலிதா சொத்து தொடர்பாக வழக்கு தொடர்ந்தது உண்மைதானா என கண்டறிய தீபா மற்றும் தீபக் ஆகஸ்ட் 30ஆம் தேதி 2:15 மணிக்கு இருவரும் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.