மாணவர் கிருபா மோகனை நீக்கியது ஏன் என சென்னை பல்கலைகழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கிருபா மோகன் என்ற மாணவர் கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தார். இதையடுத்து அதே பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு M.A (BUDDHISM) படிக்க கடந்த ஜூலை 31-ஆம் தேதி அட்மிஷன் போட்டுள்ளார். இந்நிலையில், ஒரு மாதம் வகுப்புகளில் கலந்துக்கொண்ட பிறகு அம்மாணவரை நீக்கம் செய்து துறைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்தில் தீவிரமாக இயங்கியதாலேயே தான் நீக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக தத்துவவியல் துறைத்தலைவர் வெங்கடாஜலபதி கூறும்போது, தகுதிச் சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை என்பதால்தான் அவரது சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார். மேலும் “மாணவரிடம் தகுதிச் சான்றிதழ் வழங்குமாறு பல்கலைக்கழகம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை. பல்கலைக்கழக விதிகளின்படியே அனைத்து துறைகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்தில் இயங்கியதாக கூறி தன்னை நீக்கியுள்ளதாக மாணவர் கிருபா மோகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மாணவர் கிருபா மோகனை நீக்கம் செய்தது ஏன் என வரும் 24 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு சென்னை பல்கலை கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.