சாலைகள் பராமரிக்கப்படும் வரை கப்பலூர் டோல் கேட்டில் வாகனங்களுக்கு 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரையிலிருந்து விருதுநகர் செல்லும் சாலையில் கப்பலூர் சுங்கக்கட்டண மையம் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 7ஐ பயன்படுத்தும் வாகனங்களில் இந்த மையம் கட்டணம் வசூலிக்கிறது. சமயநல்லூர் முதல் விருதுநகர் வரையுள்ள சாலைகள் இந்த டோல் மையத்தின் பராமரிப்பிலேயே உள்ளன. இந்த சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ளது. இதனால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன. சாலை சீரமைக்க டெண்டர் விட்டிருப்பதாகவும், டெண்டர் இறுதி செய்யப்பட்டதும் சீரமைப்பு பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. சாலை சரியாக இல்லாவிட்டால் சட்டப்படி குறைவாகவே டோல் கட்டணம் வசூலிக்க வேண்டும். கப்பலூர் சுங்கசாவடி மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் முழு கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் கப்பலூர் சுங்க சாவடியின் கீழ்வரும் சாலைகளை முறையாக சீரமைக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா அமர்வு, “சுங்க கட்டணம் வசூலிக்கும் சாலைகள் சேதம் அடைந்திருந்தால், அந்த சேதம் சரி செய்யப்படும் வரை குறைவாக கட்டணம் வசூலிக்க வேண்டும். சாலைகள் சரி செய்யப்பட்ட பிறகு நெடுஞ்சாலை அதிகாரிகள் குழு ஆய்வு செய்து முழு கட்டணம் வசூலிக்கலாம் என சட்டத்தில் உள்ளது. அதன்படி கப்பலூர் டோல் கேட் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் பராமரிக்கப்படும் வரை கப்பலூர் டோல் கேட்டில் வாகனங்களுக்கு 50 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.