தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுக்கு எதிரான ஒரு வழக்கை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளிவைக்கத் தேவையில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், காலியாக உள்ள 18 தொகுதிகளில் தேர்தலுக்காக செலவிட்ட பணத்தை தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களிடம் இருந்து வசூலித்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தார். அதுவரை 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன் மற்றும் ஆதிகேசவலு அமர்வு, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்ஏக்கள் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு இடைத்தேர்தலை நடத்த ஒருபோதும் இடையூறாக அமையாது எனவும், இதனைக் காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளிப்போடத் தேவையில்லை எனவும் தெரிவித்துனர். பின்னர் வழக்கை ஜனவரி 4ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக 18 தொகுதிகளின் தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.