‘25 ஆயிரம் பேர் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சிக்கு அனுமதி’ - உயர்நீதிமன்றக்கிளை கருத்து

‘25 ஆயிரம் பேர் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சிக்கு அனுமதி’ - உயர்நீதிமன்றக்கிளை கருத்து
‘25 ஆயிரம் பேர் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சிக்கு அனுமதி’ - உயர்நீதிமன்றக்கிளை கருத்து
Published on

குறைந்த பட்சம் 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி என அனுமதி வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தமிழ் நேசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் திருச்சி அசூர் பகுதியில் ஆக்சிஜன் சிலிண்டர் கம்பெனி இயங்குகிறது. கிராமத்தின் மைய பகுதியில் உள்ள இடத்தில் வைத்து இந்த கம்பெனியில் தினமும் 200 கிலோ கேஸ் நிரப்பப்பட்டு வருவதாகவும், சுமார் 1,500 சிலிண்டர்களை வைத்து பாதுகாப்பற்ற முறையில் ஆக்சிஜன் கேஸ் நிரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக இந்த நிறுவனம் உள்ளூர் பஞ்சாயத்தில் மட்டுமே அனுமதி பெற்றுள்ளது எனவும், மற்ற துறைகளின் அனுமதி பெறவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

பொதுமக்கள் மற்றும் கால் நடைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளதால், அந்நிறுவனம் செயல்படுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த பொது நலவழக்கு பணம் பறிக்கும் நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது என கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

மேலும் மனுதாரர் சார்ந்த அரசியல் கட்சி எதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர். இதுபோன்று தமிழகத்தில் அதிக அளவில் அங்கீகரிக்கப்படாத லெட்டர் பேட் அரசியல் கட்சிகள் தொடங்கப்பட்டு, பலரிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றன எனவும், இதுபோன்ற கட்சிகளால் பொதுமக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்றும் கண்டித்தனர்.

இதனை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புதிய அரசியல் கட்சி தொடங்க தேர்தல் ஆணையம் எதன் அடிப்படையில் அனுமதி வழங்குகிறது என்றும் கேள்வி எழுப்பினர். குறைந்தபட்சம் 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி என அனுமதி வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து தேர்தல் ஆணையம், உள்துறை அமைச்சகம் மற்றும் சட்டத்துறையை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com