ஆகம விதிக்கு முரணாக 2 அர்ச்சகர் நியமனம்? உயர்நீதிமன்ற மதுரைகிளை புதிய உத்தரவு!

ஆகம விதிக்கு முரணாக 2 அர்ச்சகர் நியமனம்? உயர்நீதிமன்ற மதுரைகிளை புதிய உத்தரவு!
ஆகம விதிக்கு முரணாக 2 அர்ச்சகர் நியமனம்? உயர்நீதிமன்ற மதுரைகிளை புதிய உத்தரவு!
Published on

ஸ்ரீரங்கம், குமாரவயலூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்ட பிரபு, ஜெயபாலன் ஆகியோர் நியமனங்களை ரத்து செய்து நீண்ட காலமாக பணியாற்றி வரும் கார்த்திக், பரமேஸ்வரன் ஆகிய தங்களை அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிட கோரிய வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை. “பல கோயில்களில் பல அர்ச்சகர்கள் ஊதியம் கூட வாங்காமலே இன்னும் வேலை பார்த்து வருகிறார்கள், அப்போ அவர்களின் நிலை என்னாவது?” என்று கருத்து தெரிவித்தார் நீதிபதி.

ஸ்ரீரங்கம், குமாரவயலூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் ஜெயபாலன் மற்றும் பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக நியமித்ததை ரத்து செய்து, நீண்ட காலமாக பணியாற்றும் தங்களை அர்ச்சகர்களாக நியமிக்க கோரி கார்த்திக் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கானது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, "குமாரவயலூர், சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கைலாஷ் , பிரபு, ஜெயபாலன் ஆகியோர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பிரபு மற்றும் ஜெயபாலன் ஆகியோர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டது குறித்தே மனுதாரர்கள் கேள்வி எழுப்பி மனுக்களைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். மனுதாரர்களும் அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பித்த நிலையில் அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை” என கூறினர்.

அப்போது அர்ச்சகர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தரப்பில், "2021-ம் ஆண்டு எங்களை அர்ச்சர்களாக நியமித்த நிலையில், 2022 செப்டம்பர் மாதம் தான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது" என வாதம் முன்வைக்கப்பட்டது.

ஆனால் எதிர்தரப்பு வாதத்தை ஏற்காத நீதிபதி, “இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர்கள், பல ஆண்டுகளாக அர்ச்சகர்களாக கோயிலில் பணியாற்றி வந்துள்ளனர். அவர்கள் கோயில் அறங்காவலரால் முறையாக நியமிக்கப்படவில்லை. தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோயில்களில் பல அர்ச்சகர்கள் ஊதியம் பெறாமலேயே, கோயில்களில் தங்களின் பணியை செய்து வருகின்றனர். அந்த வகையில், ஆகம விதிகளுக்கு எதிராக குமாரவயலூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற அர்ச்சகர் நியமன உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.

மேலும் “இந்த கோயிலில் அர்ச்சகர்களாக பல ஆண்டுகளாக பணியாற்றிய, மனுதாரர்களையே அர்ச்சகர்களாக நியமிப்பது தொடர்பாக கோயிலின் அறங்காவலர், எட்டு வாரங்களுக்குள்ளாக பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com