“மருமகன் கொலை, மகளை காணவில்லை” : தாயின் மனுவால் ஆவேசப்பட்ட நீதிமன்றம்

“மருமகன் கொலை, மகளை காணவில்லை” : தாயின் மனுவால் ஆவேசப்பட்ட நீதிமன்றம்
“மருமகன் கொலை, மகளை காணவில்லை” : தாயின் மனுவால் ஆவேசப்பட்ட நீதிமன்றம்
Published on

புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண் தனது மகளை காணவில்லை என தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை காவல்துறையை எச்சரித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த ஹபீசா என்ற பெண், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தனது மகள் நஜீமாவை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த முகமது இம்ரான் கான் என்பவருக்கு 2018ல் திருமணம் செய்து கொடுத்ததாக தெரிவித்திருந்தார். 10 நாட்களில் தனது மருமகன் கொலை வழக்கில் கைதாகி சிறை சென்று பின்பு ஜாமீனில் வந்ததாக கூறியிருந்தார். இதற்கிடையில் திடீரென அவர் காணாமல் போனதாக தெரிவித்திருந்தார்.

பின்னர் தனது மகள் நஜிமாவிடம் போனில் பேசிய சிலர், யாரிடமும் சொல்லாமல் வந்தால் கணவரை காட்டுகிறோம் என மிரட்டியதாகவும், அதனை நம்பி சென்ற தனது மகளையும் காணவில்லை என கூறியிருந்தார். பின்னர் தனது மருமகன் கொலை செய்யப்பட்டு கீழக்கரை கடற்கரையில் புதைக்கப்பட்டிருந்ததாகவும், போலீஸார் விசாரணையில் அதனை கண்டுபிடித்ததாகவும் மனுவில் கூறியிருந்தார்.

இதுகுறித்து கீழக்கரையைச் சேர்ந்த சாகுல் ஹமீது மற்றும் சதாம் உட்பட சிலரை போலீசார் கைது செய்ததாகவும், தனது மருமகனை கொலை செய்த கும்பலே மகளையும் கொலை செய்திருக்கலாம் என அஞ்சுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தனது மகளை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் புதுக்கோட்டை கறம்பக்குடி போலீசார் முரணாக தகவல்களை தெரிவித்துள்ளதாக அதிருப்தி தெரிவித்தனர். எனவே காணாமல் போனதாக கூறப்படும் நஜிமாவை வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் புதுகோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்து வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com