தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அனுமதி பெற்ற பின் நடந்ததா? இல்லை துப்பாக்கிச் சூடு நடந்த பின் அனுமதி பெறபட்டாதா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி.
மதுரையை சேர்ந்த ஜான் வின்சென்ட் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மே 22-ல் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்திய பொதுமக்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் போலீசார் உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டமாக வந்தனர். போராட்டகாரர்கள் தான் முதலில் அரசு சொத்துக்களை சேதபடுத்தி பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை தாக்கினர். இதன் பிறகுதான் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என கூறப்படுகிறது. மேலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற போது மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தில் இல்லாததால் சிறப்பு தாசில்தார் ராஜ்குமார் தங்கசீலன் என்பவர் துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி அளித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 22 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு கலவரம் தொடர்பாக சிப்காட் காவல்நிலையத்தில் குற்ற வழக்கு எண் 191 கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. இந்த வழக்கினை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதன் பிறகு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிப்காட் காவல்நிலையத்தில் 142 வழக்குகள் மற்றும் தூத்துக்குடி வடக்கு, தெற்கு உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் 100 வழக்குகள் என மொத்தம் 242 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யபட்டுள்ளன. தூத்துக்குடியில் நடந்த ஒரே ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் அனைத்திற்கும் சிப்காட் காவல்நிலையத்தில் ஒரு வழக்கு பதிந்த நிலையில் மீண்டும் 242 வழக்குகள் பதிவு செய்து பொதுமக்களை சட்டவிரோதமாக விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்து வருகின்றனர். மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும் போது உள்ளூர் போலீசாரும் விசாரணை என்ற பெயரில் அடிக்கடி தொந்தரவு செய்கின்றனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிப்காட் காவல்நிலையத்தில் பதிந்த குற்ற வழக்கு எண் 191 ஐ தவிர மற்ற 242 வழக்குகளை ரத்து செய்து போலீசார் விசாரிக்க தடை விதிக்க வேண்டும். 242 வழக்குகளையும் குற்றவியல் நடைமுறை சட்டபிரிவு 161 (3) ன் கீழ் வாக்குமூலமாக கருதி முதல் வழக்குடன் சேர்த்து ஒரே வழக்காக விசாரணை செய்ய வேண்டும். மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் பதிந்த குற்ற வழக்கு எண் 191 ஐ நீதிமன்ற பார்வையின் கீழ் சிபிசிஐடி விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்,144 தடை உத்தரவு ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்,ஒரு நபர் விசாரணை கமிஷனுக்கு தடைவிதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளுடன் 15 பொதுநல வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அனுமதி பெற்றபின் நடந்ததா? இல்லை துப்பாக்கிச் சூடு நடந்த பின் அனுமதி பெறப்பட்டாதா? மற்றும் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பித்த உத்தரவு அறிவிப்பு சரியான முறையில் பொதுமக்களை சென்றடையும் வகையில் விளம்பரப்படுத்தபட்டதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் தூத்துக்குடியில் இணையத்தள சேவை முடக்கத்தின் மறுஆய்வு கமிட்டியின் சீடி பைலை தாக்கல் செய்யவும், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு தொடர்பாக பதிவு செய்த முதல் வழக்கான 191 அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கினை நாளை ஜூலை 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர் .