வேல் யாத்திரை தொடர்பாக பாஜகவுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது
பாஜகவின் வேல் யாத்திரை தொடர்பாக டிஜிபி தரப்பு, நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், 10 வாகனங்களில் 30 பேர் மட்டுமே செல்வோம் என நீதிமன்றத்தில் கூறியதை பாஜகவினர் பின்பற்றவில்லை. அது வெறும் காகித அளவிலேயே உள்ளது. பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட பாஜகவினர் மாஸ்க், தனிமனித இடைவெளி போன்றவற்றை பின்பற்றவில்லை. பாஜகவினர் வேலுடன் சென்றது கோயில் யாத்திரை அல்ல. முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை. நீதிமன்றத்தில் பாஜக சொல்வது ஒன்று. செய்வது ஒன்று என தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாஜகவின் வேல் யாத்திரையால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை ஊடகங்களில் பார்த்தோம் என தெரிவித்துள்ளது. அப்போது வாதிட்ட பாஜக தரப்பு காங்கிரஸ் கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தை சுட்டிக்காட்டி, அந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக தமிழக அரசு வாய்திறக்கவில்லை என குற்றம் சாட்டியது. அதற்கு பதில் அளித்த நீதிமன்றம் தவறான செயலை நியாயப்படுத்தாதீர்கள் என கண்டனம் தெரிவித்தது.
முன்னதாக 100 பேருக்கு மேல் கூட அனுமதி அளிக்க வேண்டுமென்றும், பாஜகவின் வேல் யாத்திரைக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் தமிழக பாஜக சார்பில் நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக போலீசாரிடம் மனு அளிக்குமாறு கூறி அந்த விசாரணையை இன்று ஒத்திவைத்தது. அதன்படி பாஜக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது டிஜிபி தரப்பு மேற்கண்ட தகவல்களுடன் அறிக்கையை சமர்பித்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு மதியத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.