மெடிக்கலில் போதை ஊசி விற்ற விவகாரம்: முன்ஜாமீன் மனு தள்ளுபடி

மெடிக்கலில் போதை ஊசி விற்ற விவகாரம்: முன்ஜாமீன் மனு தள்ளுபடி
மெடிக்கலில் போதை ஊசி விற்ற விவகாரம்: முன்ஜாமீன் மனு தள்ளுபடி
Published on

மருத்துவத்துறையில் அரிதாக பயன்படுத்தக்கூடிய மருந்துகளை போதைக்காக உபயோகப்படுத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது; இதை தீவிர குற்றமாக நீதிமன்றம் கருதுகிறது எனவும், இதுபோன்ற வழக்கில் காவல்துறை விசாரணை தேவைப்படுவதால் முன்ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த அண்ணாதுரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டையில் நகர் பகுதியில் சொந்தமாக மெடிக்கல் வைத்து நடத்தி வருகின்றேன். என் மீது போதை ஊசி விற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது அரசுத் தரப்பில், "மனுதாரர் அண்ணாதுரை மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் போதை தரக்கூடிய மருந்துகள் ஊசி மூலம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த வழக்கில் ஐந்து நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவத் துறையில் மிகவும் அரிதாக பயன்படுத்தக்கூடிய சில மருந்துகளை சட்டவிரோதமாக போதைக்காக சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இது மிகவும் கொடூரமான குற்றமாக பார்க்கப்படுகிறது. தமிழக அரசு தற்போது இந்த போதை மற்றும் இதுபோன்று போதை மருந்துகளை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் சிலர் ஆன்லைன் மூலமாக வாங்கி இதனைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த மருந்துகளை தொடர்ந்து எடுத்தால் உயிருக்கு ஆபத்தாக முடியும். மேலும் மொத்த சமூகமும் பாதிக்கக்கூடும். எனவே மருந்து எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து மனுதாரரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளதால் மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது" என வாதிடப்பட்டது.

இதனை பதிவுசெய்த நீதிபதி,"அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியது போல் அரிதாக பயன்படுத்தக்கூடிய மருந்துகளை போதைக்காக உபயோகப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தீவிர குற்றமாக நீதிமன்றம் கருதுகிறது" எனக் கூறி மனுதாரரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com