அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்க கூச்சப்படுவதில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்திருக்கிறது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்தவர் கலைச்செல்வி. இவர் தனியார் வாகன விற்பனை நிறுவனத்தின் வாகன பதிவுக்கு லஞ்சம் கேட்ட போது நிறுவன மேலாளர்கள் அளித்த புகாரின்பேரில் தஞ்சை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில் நீதிமன்றம் பிறப்பிக்கும் நிபந்தனைக்கு கட்டுப்படுவதாகவும், விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆய்வாளர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார் ஆனால் போலீசார் அவரை கைது செய்யும்போது அவரிடம் எந்த பணமும் இல்லை மேலும் ஆய்வாளர் ஒரு பெண்ணாக இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகள் அனைத்துக்கும் கட்டுப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, “அரசு பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் போது கொஞ்சம் கூட கூச்சப்படுவதே இல்லை. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் தற்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது. வருடத்திற்கு நூறு வழக்குகள் என பதிவு செய்கின்றனர். முறையாக விசாரிப்பது கிடையாது. ஒருவரை கைது செய்தால் அவரது வீடு அலுவலகங்களில் சோதனையிட வேண்டும். மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளாரா? என்றும் ஆய்வு செய்யவேண்டும். அவ்வாறெல்லாம் தற்போது செயல்படுவதில்லை பெயரளவிலேயே லஞ்ச ஒழிப்பு துறையாக இருக்கிறது” என்று நீதிபதி தெரிவித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் வழக்கு விசாரணை முதல் கட்டத்தில் இருப்பதால்
ஜாமீன் வழங்க மறுத்து வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தனர்.