தமிழகத்தில் டிசம்பர் மாதத்திற்குப்பின் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
நவம்பர் 16ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என முன்னதாக அரசு அறிவித்துள்ளது. அதற்கு சில தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தநிலையில், பள்ளித் திறப்புக் குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாளையதினம் முதலமைச்சர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், டிசம்பருக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் என கிளை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
முன்னதாக, தேனி லோயர் கேம்ப் பகுதியைச் சேர்ந்த ராம்பிரசாத் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," கொரோனா நோய்க்கு இன்னமும் தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழக அரசின் போக்குவரத்து கழகமும் முழுமையாக இயங்க ஆரம்பிக்கவில்லை. இந்நிலையில் நவம்பர் 16ம் தேதி முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவ்வாறு பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவர்களிடையே சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை. பெரும்பாலான மாணவர்கள் வேறு மாவட்டங்களுக்குச் சென்று பயில்வதால், போக்குவரத்து முழுமையாக இயங்காத நிலையில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.
மேலும் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையங்களாக பல கல்லூரிகளும், பள்ளிகளும் செயல்பட்ட நிலையில், அவற்றை முறையாக சுத்தம் செய்வதற்கு முன்பாக இயங்க அனுமதிப்பது, கொரோனா பரவலை அதிகரிக்க வாய்ப்பாக அமையும். இவ்வளவு நாட்களாக பல கட்டங்களாக ஊரடங்கை கடைபிடித்தது பயனற்றதாகிவிடும். ஆகவே, நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் என்பது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில்," பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக பல கருத்துக்கள் எழுந்ததால், கருத்துக் கேட்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க விருப்பம் தெரிவிக்கவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு நீதிபதிகள், " ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறந்த நிலையில், பல மாணவர்களும், ஆசிரியர்களும் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவி வருகிறது. நீதிபதிகள் உட்பட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் குழந்தைகளும், மாணவர்களும் பாதிக்கப்பட்டால் சிரமம் ஏற்படும். ஆகவே டிசம்பருக்குப் பின் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாமே? இது நீதிமன்றத்தின் கருத்துதான்.
குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அதிக சிரமம் ஏற்படும். இது குறித்து அரசு சிறந்த முடிவெடுக்கும். அதற்கு முழு அதிகாரம் உள்ளது. ஆகவே, நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இருப்பினும் பிற மாநிலங்களில் நிகழ்ந்தவற்றை கருத்தில் கொண்டு அரசு முடிவெடுக்க வேண்டும்" என தெரிவித்து வழக்கை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.