மேலும், போதைப் பொருட்கள் குறித்து அறிந்து அவற்றை அழிப்பது முக்கியம். போதைப் பொருட்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகையில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளும் பெரும்பாலும் குறையும். அது அரசுக்கு நல்லது. ஆகவே போதைப் பொருள் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆகிய இரு பிரிவுகளுக்கும் குறைந்தபட்சம் தலா 100 காவல்துறையினரை கூடுதலாக வழங்க வேண்டும். இரு பிரிவுகளிலும் ஆண்டுக்கு 100 வழக்குகளே பதிவு செய்யப்படுகின்றன. இன்றைய சூழலில் ஊழலின் ஆழம் அதிகம் இருக்கும் நிலையில், லஞ்சம் வாங்க யாருக்கும் அச்சம் இருப்பதில்லை. வெட்கமின்றி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு அச்சம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் லஞ்சம் பெறுவது போன்ற தவறுகள் தவிர்க்கப்படும்.
தற்போது gpay போன்ற செயலிகளை பயன்படுத்தியும் லஞ்சம் வாங்குவதாக தெரியவருகிறது. அதோடு போதைப் பொருள் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆகிய துறைகள் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டிய துறைகள் என தெரிவித்தார். தொடர்ந்து, போதைத்தடுப்புப் பிரிவு காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் 50 கிலோவிற்கு அதிகமாக கஞ்சா பறிமுதல் செய்யப்படும் வழக்குகளே போதை தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்படும் என்பது இதன் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்யும்" எனத் தெரிவித்தார்.
அப்போது மீண்டும் அரசு தரப்பில், "போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தேனி ஆகிய இடங்களில் போதைப்பொருள் தடுப்பு மண்டல அலுவலகங்கள் அமைக்கப்படவுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, "போதை தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவுகளில் காவல்துறையினருக்கு எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசு முன்வர வேண்டும். போதைப் பொருட்களால் ஏராளமான மாணவர்களின் வாழ்வும், அவர்களின் எதிர்காலமும் சீரழிக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில், " பல இடங்களில் காவல்துறையினரே பிடிபடும் கஞ்சாவில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மறைத்துக்கொண்டு, அப்பாவிகள் மீது அவ்வப்போது பொய்வழக்கு பதிவுசெய்து கணக்கு காண்பிக்கின்றனர். காவல்துறையினரே குறிப்பிட்ட அளவு கஞ்சாவை பதுக்கி வைக்கின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டது.