ராமநாதபுரம் - தூத்துக்குடி விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைப்பதற்கான மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் - தூத்துக்குடி விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைப்பதற்கு மத்திய அரசு அண்மையில் அறிவிப்பாணை வெளியிட்டிருந்தது.
இதை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த செல்லம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அவருடைய மனுவில் “தெற்கு வீரபாண்டியபுரத்தில் உள்ள விவசாய நிலங்களில் சிப்காட் அமைப்பதற்காக ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் காற்றாலை மற்றும் ரயில் பாதை அமைக்க நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்தியன் ஆயில் கழக நிர்வாகிகள் கடந்த மே 6 ஆம் தேதி தெற்கு வீரபாண்டியபுரம் விவசாயிகளிடம் கையெழுத்து பெற்றதோடு, இழப்பீடை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, தூத்துகுடியில் உள்ள ஸ்பிக், ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய பூமிக்கு அடியில் எரியாவு குழாய் பதிக்க இருப்பதாகவும் அதற்காக நிலத்தை கையகப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் ஆறுகள், கால்வாய்கள், உள்ள பல பகுதிகளில் இந்தக் குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக பெட்ரோலியத்துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால் ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை இந்த அனுமதி பட்டியலில் இடம்பெறவில்லை.
சுற்றுச்சூழல் துறையிடம் முறையாக அனுமதி பெறாமல் தனியார் நிறுவனங்களுக்கு எரிவாயு வழங்கும் நோக்கில் இந்தியன் ஆயில் கழகம் செயல்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைப்பதற்கான மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் பெட்ரோலியத்துறை செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.