‘ஆளுநர் மாளிகைக்கு பூ வழங்கியதில் ரூ1.82 லட்சம் பாக்கி’ : மனு மீது விளக்கம் கேட்கும் உயர்நீதிமன்றம்

‘ஆளுநர் மாளிகைக்கு பூ வழங்கியதில் ரூ1.82 லட்சம் பாக்கி’ : மனு மீது விளக்கம் கேட்கும் உயர்நீதிமன்றம்
‘ஆளுநர் மாளிகைக்கு பூ வழங்கியதில் ரூ1.82 லட்சம் பாக்கி’ : மனு மீது விளக்கம் கேட்கும் உயர்நீதிமன்றம்
Published on

தமிழக ஆளுநராக கே.ரோசய்யா இருந்தபோது வாங்கிய பூக்களின் பாக்கி தொகை 1 லட்சத்து 82 ஆயிரத்தை வட்டியுடன் தர உத்தரவிட கோரிய வழக்கில் ஆளுநர் மாளிகையில் விளக்கம் பெற்று தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பம்மலை சேர்ந்த ஸ்டெர்லிங் ஃப்ளவர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான பஷீர் அகமது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ் பவனுக்கு பூக்கள், கலப்பின பூக்கள், அலங்கார பொருட்கள் உள்ளிட்டவற்றை சப்ளை செய்து வருகிறோம்.

தமிழக ஆளுநராக கே.ரோசய்யா இருந்தபோது 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2015ம் ஆண்டு ஜூன் வரை பூக்கள் சப்ளை செய்ததில் 8 ரசீதுகளுக்கான 2 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் நீண்ட நாட்களாக நிலுவைத் தொகை வைக்கப்பட்டது. பணம் வராதது குறித்து பலமுறை கேட்ட பிறகு ஒரு லட்ச ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது. மீதமுள்ள 1 லட்சத்து 82 ஆயிரத்தை மீண்டும் நிலுவையில் வைத்துள்ளது. எனவே அப்பணத்தை வட்டியுடன் திருப்பி தர உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை, ஆளுநர், ஆளுநரின் துணை செயலாளரிடம், ஆளுநரின் கணக்காயர் ஆகியோரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அதை ஏற்ற நீதிபதி விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com