சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது என்பதை அறிவிக்கும் வகையில், இன்றிரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை அதன் அனைத்து வாயில்களும் மூடப்படும் என்று உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது.
150 ஆண்டுகள் பழமையும், பெருமையும் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தை, சட்டத்துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அரசின் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கின்றது. இந்த வளாகத்தை அனைவரும் பயன்படுத்தினாலும், யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் ஆண்டுக்கு ஒரு நாள் மூடப்படுவது வழக்கம்.
இதன்படி, பொது மக்களுக்காக எப்போதும் திறந்திருக்கும் உயர் நீதிமன்றத்தின் ஏழு வாயில்களும் நவம்பர் மாதத்தில் ஒரு சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுகிழமை இரவு 8 மணி வரை மூடப்படும்.
பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் இந்த நடைமுறைப்படி, இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரையில் 24 மணி நேரத்துக்கு அனைத்து வாயில்களும் மூடப்படும் என்று உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது. இந்த 24 மணி நேரத்தில் நீதிமன்ற வளாகத்துக்குள் அரசு துறையினர், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.