குட்கா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை தொடர்பான வழக்கை முன்கூட்டியே விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
திருவள்ளூர் அருகே பான்மசாலா நிறுவன கிடங்கில் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக டிஜிபி ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், சிபிஐ அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ அன்பழகன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு மீதான விசாரணை செப்டம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏக்கள் பதிலளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளர். இது தொடர்பான இன்றைய விசாரணையில், குட்கா விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸை சுட்டிக்காட்டிய மனுதாரர், அதன் காலக்கெடு முடிவதற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனை ஏற்ற நீதிபதிகள், உரிமைக் குழு விவகாரம் வழக்கை எவ்விதத்திலும் பாதிக்காது என தெரிவித்து, வழக்கை செப்டம்பர் 7ஆம் தேதியே விசாரணைக்கு ஏற்பதாக ஒப்புதல் அளித்தார்.