இனிவரும் நாட்களில் கோவில்களிலோ, தனி நபர்களாலோ எவ்விதமான யானையும் வளர்ப்பு யானையாக மாற்றப்படக்கூடாது என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவு, முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை தமிழ்நாடு வனத்துறை செயலர் உறுதி செய்யவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனியார் மற்றும் கோவில்களில் வளர்க்கப்படும் யானைகள் அரசு மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய இதுவே சரியான நேரம் என்று குறிப்பிட்ட நீதிபதி, தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், அனைத்து கோவில்கள் மற்றும் தனியாரிடம் வளர்க்கப்படும் யானைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சேக்முகமதுவுக்குச் சொந்தமானது, 56 வயதான லலிதா என்ற பெண் யானை. இந்த யானை பராமரிப்பு குறித்து வனத்துறையினர் மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, யானையை பாகனிடமிருந்து பிரித்து அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும், யானை தொடர்ந்து பாகனின் பராமரிப்பிலேயே இருக்கட்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக கோவில் விழா ஒன்றுக்கு யானை அழைத்துச் செல்லப்பட்டபோது காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "லலிதா யானைக்கு உரிமை கோரிய வழக்கில் யானையை அவரிடம் இருந்து பிரிக்க வேண்டாம் என்றும், யானையை முறையாக பராமரித்து, அது தொடர்பான அறிக்கையை குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுப்புமாறு உயர்நீதிமன்ற மதுரைகளை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், யானை கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாகவும், அதற்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை எனவும் கூறி, விலங்கு நல ஆர்வலர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் மனுவை மீண்டும் எடுத்து விசாரித்த மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தொடர்ச்சியாக யானை பராமரிப்பு குறித்து அறிக்கை அளிக்கப்பட்ட நிலையிலும், யானைக்கு காயம் ஏற்பட்டது தொடர்பாக அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. வனவிலங்குகள் பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை. விலங்குகளை வளர்ப்போர் அவற்றுக்கு எவ்விதமான வலியோ, பிரச்சனைகளோ ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டும்.
இந்த வழக்கை பொறுத்தவரை லலிதா யானைக்கு உரிய பராமரிப்பை வழங்குவது அரசின் கடமை. ஆகவே மருத்துவர் கலைவாணனை லலிதா யானை பராமரிப்பிற்கான சிறப்பு பணிக்காக ஒதுக்க வேண்டும். யானையின் உடல்நிலை குறித்து மருத்துவர் கலைவாணன், விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முறையான மருத்துவமும், உணவும் யானைக்கு வழங்கப்பட வேண்டும். லலிதா யானை முழுமையாக குணமடைந்த பின், அரசு யானைகள் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட வேண்டும். லலிதா யானைக்கு 60 வயது இருக்கக்கூடும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், இனிவரும் காலங்களில் உணவும், பராமரிப்பும் வழங்கி ஓய்வு எடுக்க செய்ய வேண்டும். லலிதா யானையை எவ்விதமான வேலைகளிலும் ஈடுபடுத்தக் கூடாது.
லலிதா யானை தற்போது விருதுநகர் முத்து மாரியம்மன் கோவிலில் இருக்கும் நிலையில், யானைக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் ஒலி மாசுபாடு இல்லை என்பதை விருதுநகர் நகர காவல் ஆய்வாளர் உறுதிப்படுத்த வேண்டும். கடந்த 2021ல் உயர்நீதிமன்றம் இனிவரும் நாட்களில் எந்த யானையும் வளர்ப்பு யானையாக மாற்றப்படக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், தற்போது பல இடங்களில் யானைக்கு முறையான கூரை, உணவு, தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுவது இல்லை. பாகன்கள் குடித்துவிட்டு யானையை துன்புறுத்தும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. குடும்பத்தை விட்டு தனியே பிரித்து வளர்க்கப்படும் யானைகள், இதன் காரணமாக சில சமயங்களில் ஆக்ரோஷமாக மாறி பாகன்களை தாக்கும் சூழலும் ஏற்படுகிறது.
இந்நிலையில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், அனைத்து கோவில்கள் மற்றும் தனியாரிடம் வளர்க்கப்படும் யானைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இனிவரும் நாட்களில் கோவில்களிலோ, தனி நபர்களாலோ எவ்விதமான யானையும் வளர்ப்பு யானையாக மாற்றப்படக்கூடாது என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தனியார் மற்றும் கோவில்களில் வளர்க்கப்படும் யானைகள் அரசு மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய இதுவே சரியான நேரமாக இருக்கும். ஆகவே, இது தொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலரும், இந்து சமய அறநிலையத்துறையின் செயலரும் ஆலோசிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் அனைத்து கோவில்களுக்கும் உத்தரவுகள் வழங்கப்பட வேண்டும். எல்சா பவுண்டேஷனின் ஸ்ரீ பிரகாஷ், தரப்பில் திருப்பத்தூர் மாவட்டம், சேலம் மாவட்டம் ஆகியவை யானைகள் மறுவாழ்வு முகாம் அமைப்பதற்கு தகுந்த இடங்களாக உள்ளன என குறிப்பிட்டு இருக்கிறார். அதன் அடிப்படையில் விரிவான அறிக்கையையும் தயார் செய்து வருகிறார். திருச்சி எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாம் அமைக்க உகந்த இடம் இல்லை எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். ஆகவே இது தொடர்பாகவும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் பரிசீலிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்திருக்கிறார்.