படுகாயமடைந்த பெண்ணை 100 மீட்டர் வரை கையில் தான் தூக்கி சென்றோம் என சாலையில் வைக்கப்பட்ட பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீயை காப்பாற்ற முயன்றவர் கூறியுள்ளார்.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் பள்ளிக்கரணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் நடுவில் அதிமுக நிர்வாகியால் வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்தது. இதனால் தடுமாறி சாலையில் விழுந்த அந்த பெண்ணின் மீது பின்னால் வந்த லாரி ஏறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் லாரி டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மணிகண்டன் என்பவர் கூறுகையில், “அதிமுக பேனர் விழுந்ததாலேயே அந்த பெண் நிலைதடுமாறி இருச்சக்கர வாகனத்துடன் கீழே விழுந்தார். பேனர்கள் அனைத்துமே சரியாக கட்டப்படவில்லை. நானே ஒரு பேனரை சரியாக கட்டிவிட்டேன்.
லாரி டிரைவர் எவ்வளவோ முயற்சி செய்தும் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து லாரி பெண்ணின் மீது ஏறவேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் சாலையில் வந்த ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி பார்த்தோம். ஆனால் யாரும் நிற்கவில்லை. இதையடுத்து 100 மீட்டர் வரை அந்த பெண்ணை கையில் தான் தூக்கி சென்றோம். அதன் பிறகு ஆட்டோவில் ஏற்றி சென்றோம். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார்” எனத் தெரிவித்தார்.