வயது முதிர்ந்த எங்களின் இறுதி காலத்தை தொந்தரவு இன்றி வாழ உதவி செய்யுங்கள் என்ற மனுவை, மாவட்ட ஆட்சியரிடம் வயது முதிர்ந்த தம்பதியர் கண்ணீருடன் வழங்கியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலு செட்டி சத்திரம் அருகே அமைந்துள்ள பொன்னியம்மன் பட்டறை கிராமத்தில், விவசாயியான குப்பன் மற்றும் பவுனம்மா தம்பதியினர், அவருடைய மகனுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மகன் பழனி தங்களை தினம்தினம் குடித்துவிட்டு வந்து அடித்து துன்புறுத்தவதாக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட குறைதீர் கூட்டத்தில் பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்திலும் ஏற்கனவே புகார் அளித்ததாக கூறப்படுகிறது. மகனிடம் மாதச் செலவுக்கு பணம் கேட்டால் மிரட்டுவதாகவும், அடிப்பதாகவும் ஏற்கனவே பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் தந்தை புகார் அளித்துள்ளார்.
மேலும் குப்பன் வைத்திருந்த அனைத்து விவசாய நில பத்திரத்தை மகனான பழனி எடுத்துச் சென்று விட்டதாகவும், அதைப் பெற்றுத் தரும்படி பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் தந்தை குப்பன் புகார் அளித்துள்ளார். ஆனால் தற்போது வரை பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கண்ணீருடன் தெரிவித்த வயதான தம்பதியினர், மாவட்ட ஆட்சியரிடம் தற்போது மனு அளித்துள்ளனர்.