”ஹெல்மெட் பயன்பாடு 72% இருந்து 86% ஆக உயர்ந்துள்ளது” - சென்னை போக்குவரத்து காவல்துறை

”ஹெல்மெட் பயன்பாடு 72% இருந்து 86% ஆக உயர்ந்துள்ளது” - சென்னை போக்குவரத்து காவல்துறை
”ஹெல்மெட் பயன்பாடு 72% இருந்து 86% ஆக உயர்ந்துள்ளது” - சென்னை போக்குவரத்து காவல்துறை
Published on

சென்னையில் போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையால் 72% லிருந்து 86% பேர் ஹெல்மெட் அணிந்து பயணிப்பதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் சாலை விபத்துகளை தடுப்பதற்காக போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் கடந்த 7ஆம் தேதி வரை சாலை விபத்துகளில் சிக்கி 659 பேர் உயிரிழந்த நிலையில், 3325 பேர் காயம் அடைந்திருப்பதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதில், உயிரிழந்தவர்களில் 173 பேரும், காயம் ஏற்பட்டவர்களில் 1214 பேரும் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள். மேலும் இருசக்கர வாகனத்தில் விபத்துகளில் சிக்கி உயிரிழந்த 126 பேரும், காயமடைந்த 1056 பேரும் தலைக்கவசம் அணியவில்லை என தெரியவந்ததாக போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தலைகவசம் அணிவதை வாகன ஓட்டிகள் எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள் என்பது குறித்தான ஆய்வை கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. பத்து சந்திப்புகளில் நடைபெற்ற ஆய்வில் 72 சதவிகித நபர்கள் மட்டுமே தலைகவசம் அணிவது தெரியவந்தது. இதனையடுத்து தலைகவசம் அணிவதை கட்டாயமாக்க பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியும், வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்டது.

அதில், போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது 3,58,548 வழக்குகள் பதிவு செய்யபட்டது. அதில் 1,29,240 வழக்குகள் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்டது. சென்னையில் போக்குவரத்து காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையால் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிவது 72% லிருந்து 86% உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் 100% தலைகவசம் அணிந்து ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே, விபத்துகளை தடுக்க முடியும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com