அதிமுகவின் கடைக்கோடி தொண்டரை திடீரென சசிகலா தொலைபேசியில் அழைத்ததால் தொண்டர் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத். இவர், பேராவூரணி தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிமுக ஒன்றிய துணை செயலாளராக இருக்கிறார். இவருக்கு திடீரென தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. அதில் பேசிய நபர் உங்களிடம் "சின்னம்மா பேச வேண்டுமாம்" என்றதும் ஒரு கணம் தடுமாறிய வினோத், நம்மை யாரோ கலாய்க்கிறார்கள் என்று நினைத்து நீங்கள் யார் என்று கேட்டிருக்கிறார். அப்போது சசிகலாவின் குரல்கேட்டு ஒருகணம் திக்குமுக்காடி விட்டதாக சொல்லும் வினோத் மேலும் நம்மிடம் பேசியபோது....
" தேர்தலுக்குப் பிறகு துவண்டு போயிருந்த எங்களை திடீரென சின்னம்மா சசிகலா தொலைபேசியில் அழைத்தது அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. முதலில் நான் தொலைபேசியை எடுத்ததும் பேசிய சின்னம்மாவின் உதவியாளர், சின்னம்மா உங்களிடம் பேச வேண்டும் என்று தெரிவித்தது நம்ப முடியாததாக இருந்தது. ஆனால், அவரின் குரலை கேட்டதும் அந்த வார்த்தைகளை என்னால் வர்ணிக்க முடியவில்லை. ஒரு கடைக்கோடி தொண்டனாக இருக்கின்ற என்னை தொலைபேசியில் அழைத்து பேசியதோடு, தற்போது உள்ள கொரோனா தொற்று காலத்தில் நீங்களும் உங்கள் குடும்பமும் மிகவும் கவனமாக இருங்கள் என்றும் சொன்னது மிகவும் ஆறுதலாக இருந்தது” என்றார்.
மேலும், “ கட்சியை நான் பார்த்துக்கிறேன். நான் விரைவில் அரசியலுக்கு வருவேன் என்றும் தெரிவித்தார். அதிமுகவின் கடைக்கோடி தொண்டனான என்னிடம் சசிகலா தொலைபேசியில் பேசியது ஒவ்வொரு கடைக்கோடி தொண்டனுக்கும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. எங்களுடைய எண்ணமெல்லாம் ஒன்றுபட்ட அதிமுகவாக மாறி சசிகலா வழிநடத்த வேண்டும்” என்றும் தெரிவித்தார். இனிமேல் இந்த இயக்கத்தை கட்டிக்காக்க சசிகலாவால் மட்டுமே முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஒற்றை தலைமையுடன் வலிமையாக செயல்பட வேண்டும் என்றால் அது சசிகலாவால் மட்டும் தான் முடியும் என்றும் வினோத் தெரிவித்தார்.