நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் ஏராளமான வாரிசு வேட்பாளர்கள் வென்றுள்ளனர். அவர்கள் யார் என்று விரிவாக இங்கே பார்க்கலாம்...
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சராக இருந்த அன்பில் தர்மலிங்கத்தின் பேரனும் அன்பில் பொய்யாமொழியின் மகனுமான அன்பில் மகேஷ் திருவெறும்பூர் தொகுதியில் வென்றுள்ளார்.
விருதுநகர் மாவட்ட செயலாளராக இருந்து மறைந்த தங்கபாண்டியனின் மகனான தங்கம் தென்னரசு திருச்சுழி தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இதேபோல,
டி.ஆர்.பாலுவின் மகனான டி.ஆர்.பி.ராஜாவும் மன்னார்குடி தொகுதியில் தொடர் வெற்றி வெற்றிகளை பெற்று வருகிறார்.
முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனின் மகனான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்தி தொகுதியிலும், அண்ணாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சி.வி.எம்.அண்ணாமலையின் பேரனும் திமுகவின் தொடக்க கால இளைஞரணி நிர்வாகிகளில் ஒருவராகவும் இருந்த சிவிஎம் பொன்மொழியின் மகனுமான சிவிஎம்பி எழிலரசன் காஞ்சிபுரம் தொகுதியிலும் வெற்றி வாகை சூடி உள்ளனர்.
வில்லிவாக்கம் தொகுதியை பொறுத்தவரை திமுகவின் பொதுச்செயலாளராக இருந்து மறைந்த க.அன்பழகனின் பேரன் வெற்றி அழகனும், திருவொற்றியூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கேபிபி சாமியின் தம்பி கேபிபி சங்கரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தியாவிலேயே கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்த முதல் சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகனின் தம்பியான ஜெ.கருணாநிதி தியாகராய நகர் தொகுதியிலும், இந்தியாவிலேயே கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்த முதல் எம்.பியான வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் நின்று வென்றுள்ளனர்.
அதிமுகவை பொறுத்தவரை முன்னாள் சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் ஆலங்குளம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா, ஈரோடு மேற்குத் தொகுதியிலும், காங்கிரஸ் மூத்தத்தலைவர் திருநாவுக்கரசரின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரன் அறந்தாங்கி தொகுதியிலும் வென்றுள்ளனர். ஜே.எம்.ஆரூணின் மகன் ஜே.எம்.ஹசன் மௌலானா வேளச்சேரி தொகுதியிலும், ஊர்வசி செல்வராஜின் மகனான ஊர்வசி அமிர்தராஜ் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும் வென்றுள்ளனர்.