வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் பார்க்க பயிற்சி அளிக்கப்படுமென விளம்பரம் செய்ததாக ஹீலர் பாஸ்கர் என்பவரை கோவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
‘இனிய சுகப்பிரசவம் ஒரு வரம்’ என்ற பெயரில், நிஷ்டை சர்வதேச வாழ்வியல் பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள், ஸ்கேன் என எதுவுமே எடுக்காமல், மருத்துவரிடமும் செல்லாமல், வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்வது சுகப்பிரசவம் என்றும், இதுவே சிறந்த வழிமுறை என்றும் அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த இலவச பயிற்சி முகாம், வரும் 26-ஆம் தேதி கோவைபுதூரில் நடைபெறும் என்றும், அப்போது வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கான வழிகாட்டுதல்கள் பற்றி ஆலோசனைகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவரிடம் செல்லாமல், வீட்டிலேயே சுகப் பிரசவம் நிகழ்வதற்கான இலவச பயிற்சி முகாமிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இதுதொடர்பாக சுகாதாரத்துறை, மருத்துவத்துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனைதொடர்ந்து கோவை மாவட்ட நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்தது. அதன் அடிப்படையில் காவல்துறை இயற்கை முறை பிரசவத்துக்கு பயிற்சி என விளம்பரம் செய்த கோவை நிஷ்டை மைய உரிமையாளர் ஹீலர் பாஸ்கரை கோவை குனியமுத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
அண்மையில் திருப்பூரில் இயற்கை மருத்துவம் என்ற பெயரில், கணவரே வீடியோவைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் மேற்கொண்டபோது, கிருத்திகா என்ற பெண் உயிரிழந்த நிலையில், இதுபோன்ற சுகப்பிரசவ பயிற்சி முகாம்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளும் விடுத்துள்ளனர்.