செய்தியாளர் மணிகண்ட பிரபு
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவில் இடியுடன் கனமழை கொட்டியது. செல்லூர் கண்மாய் நிரம்பி பந்தல்குடி கால்வாயில் செல்லும் மழைநீர், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. தண்ணீர் தேங்கியதால் பல இடங்கள் தனித்தீவாக காட்சியளித்தன.
கட்டபொம்மன் நகர், பெரியார் வீதி, வாஞ்சிநாதன் தெரு, காமராஜர் தெரு உள்ளிட்ட செல்லூர் பகுதியின் பிரதான இடங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறின. இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் சிரமத்தை சந்தித்தனர். பொதுமக்கள் பலரும் வீடுகளுக்குள் முடங்கும் சூழல் ஏற்பட்டது. கழிவுநீர் மற்றும் குப்பைகள் கலந்த நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பாதிப்படைந்தனர்.
வெள்ளப் பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற மதுரை வடக்கு தொகுதி எம்.எல். ஏ தளபதியை முற்றுகையிட்டு பெண்கள் முறையிட்டனர். மழை பாதிப்பை சரிசெய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் உறுதி அளித்தார்.
கனமழை காரணமாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் வீடு இருக்கும் பீ.பீ.குளம் பகுதியில் நூறு ஆண்டுகள் பழமையான வேப்பமரம் வேரோடு சாய்ந்து அங்கிருந்த வீட்டின் சுற்றுச்சுவர் மீது விழுந்தது. விளாங்குடி பகுதியில் கண்மாய் நிரம்பி அருகில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதேபோல், ஆனையூர் கண்மாய் நிரம்பி மழைநீர் வெளியேறியதால் ஆனையூர் உழவர் சந்தை, பார்க்டவுன் உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. மதுரை ஆட்சியர் அலுவலகத்திலும் மழை நீர் குளம்போல் தேங்கியது. இதனால், ஆட்சியர் அலுவலக பணியாளர்களும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகினர். மின்மோட்டார் மூலம் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆட்சியர் அலுவலக பகுதியில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகி இருப்பதாக குற்றஞ்சாட்டும் பொதுமக்கள், முறையான மழைநீர் வடிகாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து விளக்கம் அளித்த மதுரை மாநகராட்சி ஆணையர், தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். 5 மண்டலங்களைச் சேர்ந்த உதவி ஆணையர்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும், தேவைப்படும் இடங்களில் கால்வாயை சீரமைத்து அடைப்புகளை சரி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.