கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பாம்பாறு அருவி ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதன் காட்சிகள் பார்ப்போரை பரவசப்படுத்தும் வகையில் உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த 20 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மலைப் பகுதிகளில் உள்ள நீரோடைகள் அனைத்தும் பெருக்கெடுத்துள்ளது. நகரில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான பாம்பாறு அருவியில் வெள்ளம் போல நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இந்நிலையில், அருவிப் பகுதிக்கு செல்லும் வழிகள் மற்றும் அருவியின் முன்பக்கத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று வனத்துறைக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து வனச்சரகர் சிவகுமாரிடன் கேட்டபோது அப்பகுதியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.