வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 2 நாட்களில் தென் தமிழகம், கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 2 நாட்களில் தென் தமிழகம், கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 2 நாட்களில் தென் தமிழகம், கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
Published on

அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகம், கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வானிலை நிலவரம் மற்றும் மழை குறித்து சென்னை வானிலை மையத்தின் தென்மண்டல வானிலை மையத் தலைவர் பாலச் சந்திரன் இன்று செய்தியாளார்கள் சந்திப்பில் விவரிக்கும்போது, "குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல்பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டியில் 17செ.மீ மழையும் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் 16 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது.

அடுத்த 2 நாட்களில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களான விழுப்புரம், புதுவை, காரைக்கால், கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரையில், கடந்த அக்.1 முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்துள்ள மழையின் அளவு 452 மி.மீ. இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 419 மி.மீ. இது இயல்பைவிட 8% அதிகம்.

சென்னையை பொறுத்தவரையில் கடந்த அக்.1 முதல் இன்று வரை பெய்துள்ள மழையின் அளவு 1034 மி.மீ. இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 734 மி.மீ. இது இயல்பைவிட 41% அதிகம். மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை’’ என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com